சென்னை: நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையண்ணன் சாமி கோயிலைச் சுற்றி மண்ணால் கட்டப்பட்ட சுற்றுச்சுவரைச் சேதப்படுத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் முன்னதாக உத்தரவிட்டுள்ளார். ஆனால் அந்த மண் சுவரில் தங்கம், வைரம் போன்ற விலைமதிப்பற்ற பொருட்கள் இருப்பதாகக் கருதி, மண் சுவரைச் சேதப்படுத்தி வருவதாகவும், கோயிலில் உள்ள சிலைகள், சிற்பங்கள் போன்ற புராதனப் பொருட்களையும் சேதப்படுத்தி வருவதாகவும் கூறி, அதே பகுதியைச் சேர்ந்த ராசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தக் கோயிலில் இருக்கக் கூடிய நினைவுச் சின்னங்கள், சிற்பங்கள் என அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டார். மேலும் இந்தக் கோயில் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தொல்லியல் துறை ஆய்வுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சண்டிகர் மேயர் தேர்தல்: தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை - உச்ச நீதிமன்றம் உத்தரவு!