சென்னை: வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வள்ளலாரின் சத்தியஞான சபைக்கு தானமாக வழங்கப்பட்டு ஆக்கிரமிப்பில் உள்ள 27.86 ஏக்கர் நிலங்களை கண்டறிய 10 அதிகாரிகள் அடங்கிய குழுவை கடலூர் மாவட்ட ஆட்சியர் நியமித்துள்ளதாகக் கூறி, அதுகுறித்த உத்தரவை தாக்கல் செய்தார்.
மேலும், ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டிய தலைமை வழக்கறிஞர், வடலூரில் உள்ள 107.08 ஏக்கர் நிலம் வள்ளலார் தெய்வ நிலையம் என்ற பெயரில் பதியப்பட்டிருந்தது. 1975 ம் ஆண்டுக்கு பின் 71 ஏக்கர் நிலம் மட்டுமே வள்ளலார் தெய்வ நிலையம் பெயரில் உள்ளதாகவும், மீதமுள்ள 34 ஏக்கர் நிலம் தனிநபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் கடைகள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
34 ஏக்கர் நிலமும் தனி நபர்கள் பெயருக்கு பட்டா வழங்கியிருந்தால், அது சட்டவிரோதம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்நிலங்கள் 1975ம் ஆண்டுக்கு பின் யார் பெயரில் உள்ளது? தற்போது யாரிடம் உள்ளது? என்பதை கண்டறிந்து, அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் செப்டம்பர் 12ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். மேலும், 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண மாவட்ட ஆட்சியர் அமைத்த குழுவில், குறிஞ்சிப்பாடி, வடலூர் சார் பதிவாளர்களையும் சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட குழிகள் காரணமாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், காலி நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும் நிலத்தில் வேலி அமைக்க அனுமதிக்க வேண்டும் என அறநிலையத் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வள்ளலார் சத்தியஞான சபை அறங்காவலர்கள், அறநிலையத் துறையுடன் கலந்தாலோசித்து, 71 ஏக்கர் நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் காவல் துறை பாதுகாப்பு கோரவும் உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு; பள்ளியை சிறப்பு அதிகாரியை வைத்து நிர்வகிக்க அரசு பரிந்துரை!