சென்னை: சென்னையைச் சேர்ந்த ராஜம்மாள் தனது மருமகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையைச் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து ராஜம்மாள் சென்னை புழல் மத்தியப் பெண்கள் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசின் அரசாணைப்படி 50 வயதிற்கு மேற்பட்ட பெண் கைதிகளுக்கு நிபந்தனைகளுடன் தண்டனைக் காலத்தில் 50 சதவீதத்தை நிறைவு செய்தால் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகியவற்றில் முன் விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.
இந்த அரசாணைப்படி தனது தாயை விடுவிக்கக் கோரி ராஜம்மாள் மகள் கீதா மலர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி புழல் சிறை நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கை மனு அளித்திருந்தார். ஆனால் மனு பரிசீலிக்கவில்லை என்பதாலும், தனது தாயை முன் விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் மனுதாரர் தாய் 2 ஆண்டுகள் 5 மாதம் 29 நாள் மட்டுமே சிறையில் இருந்ததாகவும் 50 சதவீதத் தண்டனை நிறைவு செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முஹம்மது சைபுல்லா, கைது செய்யப்பட்டு நீதிமன்றம் காவலுக்கு உட்படுத்தப்பட்ட நாளை அரசுக் கணக்கில் கொள்ளவில்லை.
எனவே அதனைக் கணக்கில் கொண்டு முன் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து நீதிபதிகள், மூதாட்டி கைது செய்யப்பட்ட நாளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், மனுதாரரின் தாய் ராஜம்மாள் 2 ஆண்டுகள் 6 மாதம் சிறைத் தண்டனை நிறைவு செய்ததால் மத்திய அரசின் அரசாணைப்படி முன் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: லாக்கப்பில் சட்டக்கல்லூரி மாணவரைத் தாக்கியதாக வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்!