சென்னை: வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நிலத்தை வகைமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவில் உள்ள குறைபாடுகளை சரி செய்து, புதிய உத்தரவுகளை பிறப்பிக்க மூன்று வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.
இதற்கிடையில், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் 194 பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிலம் வள்ளலார் கோயிலுக்குச் சொந்தமானது என எந்த ஆவண ஆதாரங்களும் இல்லை. கோயிலுக்குச் சொந்தமான நிலங்களின் சர்வே எண்களை தங்களுக்கு வழங்க வேண்டும். வழக்கு தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்.
இதையும் படிங்க: பெண் கடத்தல் வழக்கு: “இதுபோன்ற கதையை சினிமாவில் கூட பார்த்ததில்லை”- நீதிபதிகள் அதிருப்தி
இதையடுத்து, அறநிலையத் துறையிடம் ஆவணங்களைப் பெற அறிவுறுத்திய நீதிபதிகள், நிலம் தங்களுக்குச் சொந்தமானது என நிரூபிக்க ஆவண ஆதாரங்களை தாக்கல் செய்ய மூன்று வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
அதே போன்று, நிலம் வகைமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு 3 வார கால அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை நவம்பர் 14ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்