சென்னை: கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல்நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர், கரூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் அவரது சகோதரர் சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், அவருக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்