சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற மூன்றாம் பாலினத்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த கொள்கையை வகுக்க அரசு திட்டவட்டமாக உள்ளதாகவும், அதற்கு மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன எனக் கூறி, அரசின் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
இதை அடுத்து, தமிழகத்தில் எத்தனை மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்? என்பது குறித்த எந்த புள்ளி விவரங்களும் இல்லை என்பதால், முதலில் அந்தப் புள்ளி விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தற்போது, சாதிச்சான்று அடிப்படையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், அதைத் தனி இட ஒதுக்கீடாகக் கருத முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களைச் சேகரிக்க இதுவே தக்கத் தருணம் என்பதால், இந்த நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எத்தனை சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறித்துக் கொள்கை முடிவை எடுக்க அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். அப்போது, பொது இடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனிக் கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், அது சம்பந்தமாகவும் வழக்குகள் உள்ளதாகவும் நீதிபதி பரத சக்கரவர்த்தி குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என தனிக் கழிப்பிட வசதியை ஏற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராஜிவ்காந்தி கொலை வழக்கு; மூவரை இலங்கைக்கு அனுப்பத் தமிழக அரசு கோரிக்கை! உயர் நீதிமன்றம் தெரிவித்தது என்ன?