மதுரை: மதுரையை சேர்ந்த சங்கிலி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை தமிழக அரசின் அரசு விழாவாக அக்டோபர் 30-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
குருபூஜைக்காக ராமநாதபுரம் பசும்பொனில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருகை தருவார்கள். அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகை தரும் நடுத்தர மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்வதற்கு பேருந்துகளை பயன்படுத்த முடியாமல், தங்களது குடும்பத்தோடு வாடகை வாகனங்களை மட்டுமே உபயோகப்படுத்த முடியும்.
ஆனால், பசும்பொன் செல்வதற்கு காவல்துறையினர் வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். எனவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு செல்வதற்கு வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பசும்பொன் செல்வதற்கு எந்த வாகனம் அனுமதிக்க வேண்டும் எந்த வாகனத்தை அனுமதிக்க கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கு தான் தெரியும் என்ன தெரிவித்த நீதிபதிகள், பசும்பொன் செல்வதற்காக வாகன அனுமதியில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கு விசாரணை குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.