தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய பிரதமர் மோடி, “அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்த போது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
இதன் பொருள் அவர்கள் இந்த செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா? மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச் செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் என் தாய்மார்கள் மற்றும் சகோதரியின் தாலிகளைக் கூட விட்டுவைக்காது” என்று பேசினார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோடி கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரை போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டு கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளை பேச மோடிக்கு ஏதுமில்லை. நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்டரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார்.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும், கலவர வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் கரையவில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் பின்பற்றவில்லை.
நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தில் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு அப்பட்டமாக மத வெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவறுப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது.
பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இதை இந்திய தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து போனால் அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விகுறியாகிவிடும் என்பதையும் கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மமக வலியுறுத்துகிறது" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்தேன்” - வீட்டுத் தோட்டத்தில் விசிட் அடித்த முதலை! - Crocodile Enters House