நீலகிரி: உலகப் புகழ்பெற்ற நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணித்து வருகின்றனர். ரயில் பயணத்தின்போது இயற்கை காட்சிகள், மலைமுகடுகள், குகைகள் வளைந்து, நெளிந்து செல்லும் ரயில் பாதையில் பயணிப்பது புதுவித அனுபவத்தை தருவதால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து இந்த மலை ரயிலில் பயணம் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருவதால், மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுவதாலும், மரங்கள் வேரோடு சாய்வதாலும் ரயில் பாதை சேதமடைந்தன. மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே உள்ள ஆர்டர்லி கல்லார் ரன்னிமேடு போன்ற பகுதிகளில் உள்ள ரயில் பாதையில் பாறை மற்றும் மண் சரிந்ததால், மலை ரயில் பாதை சேதமடைந்தது.
இதனை சீர் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு வாரம் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் நேற்று முன்தினம் வழக்கம்போல் துவங்கியது. இந்நிலையில் தொடர் மழையால் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதாலும், தொடர் மழை பெய்து வருவதாலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஆனால், குன்னூர் - ஊட்டி இடையே வழக்கம் போல் ரயில் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ரயில் பயணம் மேற்கொள்ள வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோவையில் திறக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா! ஆர்வமுடன் குவியும் பார்வையாளர்கள் - Coimbatore butterfly park Opens