சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் பால்பண்ணை - சிறுசேரி சிப்காட் வரையிலான 3வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக ராயப்பேட்டையில் இருந்து ஆர்.கே.சாலை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்காக, "பவானி" என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தின் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, பூந்தமல்லியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிமனை மற்றும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜூனனுடன் இன்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜூனன் கூறியதாவது, “ஆளில்லாத ரயில் இயக்குவது எப்படி? ரயில் வரும் நேரம் எப்போது என்பது உள்ளிட்ட இங்கு நடைபெறும் பணிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். இன்று 3 இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்து இரண்டு மாதங்களுக்கு சோதனை ஓட்டம் செல்லும்.
பூந்தமல்லியில் - போரூர் மெட்ரோ: 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். மற்ற வழித்தட திட்டங்களும் விரைந்து முடிக்கப்படும். பூந்தமல்லி பணிமனையில் 75 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது. 2025ஆம் ஆண்டு மார்ச்சில் அனைத்து பணிகளும் முடிந்துவிடும். மெட்ரோ ரயில் பணிக்காக நிலம் எடுப்பது 99 சதவீதம் முடிந்து விட்டது.
கிளாம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக மெட்ரோ ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை இடையில் 25 மீட்டர் இடைவெளியில் இடம் உள்ளது. அந்த வழியில் எதிர்காலத்தில் மெட்ரோ ரயில் பயன்படுத்தப்படும்” என்றார்.
மெட்ரோ ரயில் பணியில் தற்காலப் பணியாளர்களுக்கு விபத்து ஏற்பட்டால் நிதியுதவி வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “இங்கு பணிபுரிபவர்களுக்கு விபத்து ஏற்படின் அவர்களுக்கு 2 நாட்களுக்குள் CMRL (Chennai Metro Rail Limited)-ல் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து லேபர் கமிஷனிடம் புகார் அளிக்கப்படும். மேலும், காண்ட்ரக்டர் அவர்களுக்குத் தேவையான நிதியினை வழங்க வேண்டும். அவ்வாறு அவர்கள் அளிக்காத பட்சத்தில், காண்ட்ரக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி! - Senthil Balaji in Hospital