சென்னை: மதிமுக பல்வேறு சின்னங்களில் தேர்தலில் போட்டியிட்டிருக்கும் நிலையில், வருங்காலத்தில் நிரந்தர சின்னத்தை வசமாக்குவோம் என இன்று (மே.06) மதிமுக 31ஆம் ஆண்டு தொடக்க நாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி வைகோவால் தொடங்கப்பட்டு 30 ஆண்டுக் காலம் நிறைவடைந்து, இன்று 31 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் மதிமுக 31 ம் ஆண்டு தொடக்க நாளை கொண்டாடும் வகையில், விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட இவ்விழாவில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து இரத்ததான நிகழ்வையும் துவக்கி வைத்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி எங்கள் போராட்டங்களுக்கெல்லாம் பக்கபலமாக இருக்கிறது. இந்தியாவின் பிரதான கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் மதிமுகவை இணைத்து, துணை அமைப்பு போல அன்பு காட்டி ஆதரிக்கிறது.
தமிழகத்தை, திராவிட இயக்கத்தைப் பாதுகாப்பதற்கான இயக்கம் மதிமுக, திராவிட முன்னேற்றக் கலகத்திற்கு யாரேனும் தொல்லை கொடுக்க நினைத்தால், அதைத் தடுத்து நிறுத்தித் தகர்க்கும் பாசறை தான் மதிமுக. மதிமுக தனித்துத் தான் இயங்கும், ஆனால் திமுகவிற்கு பக்கபலமாக, காக்கும் அரணாகச் செயல்படும். மதிமுக பல்வேறு சின்னங்களில் தேர்தலில் போட்டியிட்டிருக்கும் நிலையில், வருங்காலத்தில் நிரந்தர சின்னத்தை வசமாக்குவோம். மதிமுக தமிழ்நாட்டின் நலனைக் காக்கும், இந்தியை உள்ளே விடாமல் தடுக்கும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி தொழிற்சாலையை மூடிய வெற்றி மதிமுகவை சேரும். காவிரி நதி நீர் பிரச்சனையில் தொடர்ந்து போராடி வரும் சூழலில், மேகதாது அணை கட்டுவதில் மத்திய அரசு கர்நாடக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தமிழகத்தை வஞ்சிக்கிறது" என கூறியுள்ளார்.
தொடர்ந்து பிரதமரின் பேச்சு தரக்குறைவாக இருப்பதாகக் கூறிய அவர், வருங் காலங்களிலும் பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்றக் கழகமே ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெல்லை ஜெயக்குமார் மரணம்: முன்னாள் மத்திய அமைச்சரிடம் தனிப்படை போலீசார் விசாரணை! - Jayakumar Death Probe