தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே ஆடுதுறையை அடுத்துள்ள மருத்துவக்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாத ஆண்டு திருவிழாவின்போது, சுமார் 3 டன் எடை கொண்ட விசேஷ சக்கரமில்லா தூக்குத் தேரில் திரௌபதியம்மன் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக கோயில் வரை பவனி வந்த பிறகு, தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா நேற்று (மே 20) மாலை நடைபெற்றது.
இதனைதொடர்ந்து, ஆடுதுறை வீரசோழன் ஆற்றிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புடைசூழ சக்கரமில்லா தூக்கு தேரில் எழுந்தருளிய திரௌபதியம்மனை 200க்கும் மேற்பட்டோர் தங்களது தோளில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர். அப்போது அம்மனை ஏராளமானோர் வீடுகள்தோறும் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்
தூக்கு தேர் பவனி வரும் பாதையில், ஆடுதுறை - மேல்மருத்துவக்குடி இடையே சாலையின் குறுக்காக செல்லும் ரயில்வே மின்வடத்தை கடக்க வேண்டியிருந்ததால் தூக்குத் தேர் அந்த இடத்தை கடக்கும் நேரத்தில், கும்பகோணம் -மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் சுமார் அரை மணி நேரமும், ஆடுதுறை பகுதி முழுவதும் பிற்பகல் முதல் மாலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து தூக்கு தேர் கோயிலை சென்றடைந்த பிறகு, அங்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் தீமிதித்து அம்மனை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தீமிதி திருவிழாவை காண சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் மருத்துவக்குடியில் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 3 டன் எடையுள்ள தேரினை தோளில் தூக்கிய பக்தர்கள்.. தஞ்சை முத்து மாரியம்மன் கோயில் தூக்குத்தேர் திருவிழா கோலாகலம்! - Thooku Ther Thiruvizha