திருநெல்வேலி: நெல்லையில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்தி வரும் தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் (பிபிடிசி) என்ற தனியார் நிறுவனத்துக்கு சிங்கம்பட்டி ஜமீன் கொடுத்த 99 ஆண்டு குத்தகை காலம் 2028ஆம் முடிவடைய உள்ளதால், முன்கூட்டியே தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிர்வாகம் விருப்ப ஓய்வு கொடுத்துள்ளது.
மேலும், அவர்களை மலைக்கிராமங்களில் இருந்து கீழே இறக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதேநேரம், சுமார் 4 தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்த தொழிலாளர்கள், மாஞ்சோலை பகுதியை விட்டு கீழே இறங்க மனம் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இப்பகுதியிலே தொடர்ந்து வாழ்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து முன்வைக்கின்றனர். இதனையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாஞ்சோலைக்குச் சென்று தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
இதனிடையே, தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்து கொடுக்கும் வரை அவர்களை கீழே இறக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் குழு மாஞ்சோலை சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அதிகாரிகளிடம் விருப்பம் இல்லாமல்தான் நாங்கள் விருப்ப ஓய்வு கடிதத்தை கொடுத்துள்ளதாகவும், நிறுவனத்தின் சூழல் மோசமாக இருப்பதாகவும், நிறுவனம் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறி எங்களிடம் விருப்ப மனு தருமாறு நிறுவனத்தினர் தெரிவித்தாகவும் தொழிலாளர்கள் கூறினர்.
அதற்கு பதில் அளித்த தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், விருப்பம் இல்லாமல் விருப்ப ஓய்வு கடிதத்தை கொடுத்தவர்களின் விருப்ப ஓய்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும், விருப்ப ஓய்வு ரத்து செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்குவது நிறுவனத்தின் விருப்பம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாஞ்சோலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தி, தொழிலாளர்களுக்கு நிலம், வீடு வழங்க வேண்டும் என்றும், நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: ஊதிய விவகாரம், பணி நிரந்தரம் கோரி டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!