திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயண கட்டண குறைவு மற்றும் பயண செளகரியம் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரயிலை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி நோக்கி செல்லும் பயணிகள் ரயிலில் நேற்று இரவு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் (வயது 24) என்பவர் அம்பாசமுத்திரம் செல்வதற்காக பயணித்துள்ளார். ரயில் அம்பாசமுத்திரத்தை வந்தடைந்ததும், ரயிலில் இருந்து இறங்கிய சிவசுப்பிரமணியன் திடீரென கால் தவறி ரயிலுக்கு அடியில் தண்டவாள பகுதியில் விழுந்தார்.
அவர் ரயிலுக்கு அடியில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள், உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், ரயிலில் சிக்கியிருந்த சிவசுப்பிரமணியனை மீட்க முயன்றனர். அப்போது அவரது இரு கால்களும் துண்டானது தெரிய வந்துள்ளது. இரு கால்களும் இல்லாத நிலையில், உயிருடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சிவசுப்பிரமணியன் ரயில் நிற்பதற்குள் அவசரமாக கீழே இறங்கிய போது, ரயிலுக்கு அடியில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக, அம்பை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இந்த நிலையில்சிவ சுப்பிரமணியன் சிகிச்சை பலனினிறி உயிரிழந்துள்ளார். பின்னர், இது குறித்து அம்பாசமுத்திரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ரயில் நிற்பதற்குள் சிவசுப்பிரமணியம் அவசரமாக கீழே இறங்க முயன்றபோது கால் தவறி ரயிலுக்கு அடியில் விழுந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கிரில் மாஸ்டரை சுத்துப்போட்ட கும்பல்.. கண்ணிமைக்கும் நேரத்தில் ஓட்டலில் கொலை.. தருமபுரியில் பயங்கரம்! - Hotel employee killed