தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முயற்சித்தவரை ரோந்து பணியில் இருந்த போலீசார் பிடிக்க முயன்ற நிலையில், அவரை கத்தியால் குத்தியுள்ளதாக தெரியவருகிறது. இது குறித்து, தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மத்திய பகுதியில் தெற்கு சம்மந்தமூர்த்தி தெருவில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. அதில், இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கனரா வங்கி தலைமை அலுவலகத்திற்கு அலாரம் ஒலிக்கவே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தென்பாகம் போலீசார், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபர், தான் கையில் வைத்திருந்த கத்தியால் போலீசாரை தாக்கியுள்ளார். இதில் போலீசாருக்கு பலத்த காயமடைந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான போலீசார், ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், காயமடைந்த போலீசாரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே பிடிபட்ட நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவரது பெயர் செந்தில் என்று மட்டும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது போன்ற தகவல்களை அவர் கூற மறுப்பதால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், விசாரணை நடத்துவதில் போலீசார் தயக்கம் அடைந்துள்ளனர். இருப்பினும் அவர் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவரா? அல்லது போலீஸ் விசாரணைக்காக நடிக்கிறாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'வீடியோ போடாதீங்க ப்ளீஸ்'.. ஆபாச ஆங்கரால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. யூடியூபர்ஸ் கைது..! - Veera Talks Anchor