நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள இளித்தொரை கிராமத்தில் இருக்கும் சமுதாய கூடத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று 'மக்களுடன் முதல்வர்’ திட்டத்தினை துவக்கி வைத்தார். இதில் 15 அரசுத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், “மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் திமுக ஆட்சியின் முக்கிய கடமை. இதுவரை மக்கள் தங்கள் தேவைகள் குறித்து மனுவாக எழுதி அரசு அலுவலகம் அலுவலகமாகச் சென்று தங்கள் புகார்கள் மற்றும் தேவைகளை அரசிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மக்கள் அலையாமல் ஆன்லைன் மூலம் தங்கள் தேவைகளை விண்ணப்பிக்கும் வகையில் ஆன்லைன் விண்ணப்பங்கள் வழி மனுக்கள் பெற்று, பின் விண்ணப்பம் குறித்து 30 நாள்களில் பதில் வரும் சேவைகள் ஒருபுறம் இருக்க, தற்போது தொழில்நுட்பம் குறித்து அறியாத மக்களுக்காக இந்த மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரே மையத்தில் 15 துறை அதிகாரிகள் முன்னிலையில் மக்கள் தங்களது மனுக்களைத் தரும் பட்சத்தில், அப்பகுதி மக்களின் குறைகள் முடிந்தவரை அன்றே நிறைவேற்றித் தர அனைத்து முயற்சியும் எடுக்கப்படும். நிலப்பிரச்னை முதல் எந்த பிரச்னைகளாக இருந்தாலும் இந்தத் திட்டத்தில் உடனடியாக தீர்வு காண முடியும்” என்றார் .
மேலும், இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான பயிர்க் கடன், கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் முதியோர்களுக்கான மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், குன்னூர் கோட்டாட்சியர் சதீஷ், குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், சுப்பிரமணி மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில், இளித்தொரை கிராம மக்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் மழைநீர் வடிகால்வாய் முகத்துவாரத்தை சீர்செய்யும் பணிகளின் நிலை என்ன?