சென்னை: அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்ததாக கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டி, சவுக்கு சங்கரின் மனுவை பட்டியலிட பதிவுத்துறை மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யக் கோரி சவுக்கு சங்கர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் பதிவுத்துறை முடிவு செய்ய முடியாது எனக்கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரின் மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்வதற்காக வழக்கை பட்டியலிட உத்தரவிட்டனர்.