மதுரை: மதுரையில் நேற்று நள்ளிரவு பெய்த கடும் மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் செல்லூர் கண்மாயிலிருந்து வழிந்து ஓடும் பந்தல்குடி கால்வாயில் தண்ணீர் நிறைந்து ஓடியது.
இந்நிலையில் கோரிப்பாளையம் அருகேயுள்ள பந்தல்குடி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்ற கூலித் தொழிலாளி தனது வீட்டின் அருகேயுள்ள பந்தல்குடி கால்வாயில் நீர் நிரம்பி சென்றதால் அங்குள்ள பாலத்தின் கீழ் நீரில் அடித்து வரப்பட்ட குப்பைகள் முழுவதுமாக தேங்கியது. இதனால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டது. அதனால் இன்று (அக்.23) மாலை பாண்டியராஜன் தனது நண்பர்களோடு சேர்ந்து கால்வாயில் அடைத்துக் கொண்டிருந்த குப்பைகளை அகற்ற முயன்றார். அச்சமயம் எதிர்பாராத விதமாக வெள்ள நீரில் மூழ்கினார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேர் அறிவுரை கழகத்தில் ஆஜர்!
அவருடன் இருந்த நண்பர்கள் கால்வாயில் இறங்கி பாண்டியராஜனை தேடினர். இதனிடையே தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின் தீயணைப்புத் துறையினர் நடத்திய தீவிர தேடுதல் பணிக்குப் பிறகு தண்ணீருக்குள் மூழ்கி இருந்த பாண்டியராஜனின் உடலை மீட்டனர்.
அங்கு அவரது உடலை பரிசோதித்த போது அவர் மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் பாண்டியராஜனின் உடல் உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்