மதுரை: போலி பாஸ்போர்ட் பெற உதவி செய்ததாக இ-சேவை முகவர் கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறையின் உதவி இல்லாமல் யாரும் போலி பாஸ்போர்ட் பெற முடியாது எனவும் நீதிபதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், போலி பாஸ்போர்ட் பெற்ற நபர்களின் விவரங்களை சரி பார்த்த காவலர்களை ஏன் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கவில்லை எனவும் நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையம் நடத்தி வரும் முகவர் வாடிக்கையாளர் ஒருவருக்கு போலி முகவரி மூலம் போலி பாஸ்போர்ட் விண்ணப்பித்துக் கொடுத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். அவர் தனக்கு வழக்கிலிருந்து ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 'நான் தனியார் இ-சேவை மையம் நடத்தி வருகிறேன். அதில், வாடிக்கையாளர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பித்து வருகிறேன். அதுபோன்று ஒரு வாடிக்கையாளருக்கு பாஸ்போர்ட்டை விண்ணப்பித்து, வாடிக்கையாளர் காவல்துறை விசாரணை முடிந்து பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.
ஆனால், போலி முகவரி மூலம் விண்ணப்பித்து, போலி பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்ததாகக் கூறி காவல்துறையினர் என் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர். தனக்கும், வாடிக்கையாளருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத நிலையில் தன்னை கைது செய்துள்ளனர். ஆகையால், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முறையாக காவல்துறை விசாரணை முடிந்த பின்னரே பாஸ்போர்ட் விநியோகிக்கப்படும் நிலையில், காவல்துறையின் உதவி இல்லாமல் யாரும் போலி பாஸ்போர்ட் பெற முடியாது எனவும், போலி பாஸ்போர்ட் பெற்ற நபர்களின் விவரங்களைச் சரிபார்த்த காவல்துறை அதிகாரிகளை ஏன்? இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
அப்போது பட்டுக்கோட்டை டிஎஸ்பி நேரில் ஆஜராகி, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவாக வழக்கை முடிப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதனைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மத்திய பிரதேசத்தில் பற்றி எரியும் பட்டாசு ஆலை; 11 பேர் உயிரிழப்பு - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!