மதுரை: களஞ்சிய இயக்கம் என்ற அமைப்பின் வாயிலாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், பாண்டிச்சேரி, ஒடிசா, மகராஷ்ட்ரா உள்ளிட்ட 14 இந்திய மாநிலங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களை ஒருங்கிணைத்து சுயஉதவிக்குழுக்களைத் தோற்றுவித்து வந்தவர் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை.
சின்னப்பிள்ளை விருதுகள்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கைகளால் 'ஸ்த்ரீ சக்தி - மாதா ஜீஜாபாய் விருது' கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சின்னப்பிள்ளை பெற்றார். அதே மாதம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் 'பொற்கிழி' வழங்கி பாராட்டப்பட்டார். தொடர்ந்து தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி 2018-ஆம் ஆண்டு 'ஔவையார் விருதும்', 2019-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 'பத்ம ஸ்ரீ விருதும்' வழங்கி சின்னப்பிள்ளையை கௌரவித்தனர்.
பல்வேறு விருதுகளைப் பெற்று நாடறிந்த பெண்மணியாக சின்னப்பிள்ளை வலம் வந்தபோதும்கூட, தனக்கென சொந்தவீடு ஏதுமின்றி, மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி அருகேயுள்ள பில்லுசேரி கிராமத்தில் தனது மகன் வீட்டில்தான் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தனக்கு வீடு தருவதாகக் கூறிச் சென்ற சிலர் பட்டா மட்டும் கொடுத்துவிட்டுச் சென்று இரண்டாண்டுகள் ஆகியும்கூட இன்னமும் வீடு கிடைக்கவில்லை என்று ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சின்னப்பிள்ளை மார்ச் மாதம் சிறப்பு நேர்காணல் வழங்கியிருந்தார்.
இதையும்44 படிங்க: எப்படி இருக்கிறார் சின்னப்பிள்ளை? சாதனை தமிழச்சியின் இன்றைய நிலை என்ன?
கனவு இல்லம்: இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக, பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு தமிழக அரசே வீடு கட்டித்தருவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் என அறிவிப்புச் செய்ததுடன், அன்றைய தினமே அதற்கான பணிகளை முடுக்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம் அழகர்கோவில் சாலையில் அப்பன்திருப்பதி அருகே அமைந்துள்ள திருவிழான்பட்டி கிராமத்தில் சின்னப்பிள்ளைக்கு 1 சென்ட் 380 சதுர அடி அளவீடு செய்து வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
'கலைஞரின் கனவு இல்லம்' என்ற திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. தற்போது 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய முழுமை பெற்றுள்ளன.
கடந்த ஜூன் 15-ஆம் தேதி வீட்டுவாசலில் நிலைச்சட்டம் பொருத்தும் பணி நடைபெற்றது. சுற்றிலும் 3 அடி அகலத்திற்கு இடம் விடப்பட்டு, ஒரு சென்ட்டில் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பூச்சுப்பணி உள்ளிட்ட சில பணிகள் மட்டும் மீதமுள்ள நிலையில், ஆவணி மாதத்தில் வீட்டிற்கு பால் காய்ச்ச திட்டமிடப்பட்டுள்ளது என சின்னப்பிள்ளை கூறினார்.
ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "இத்தனை ஆண்டு காலமாக எனக்கென்று வீடு எதுவும் இல்லாமல் மிகவும் வேதனைப்பட்டிருந்தேன். இந்நிலையில் எனது பேட்டியைப் பார்த்துவிட்டு தமிழக முதலமைச்சர் உடனடியாக இங்கு வீடு கட்டித்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கும், வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்திக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதற்கான ஏற்பாடுகளை மிக விரைவாகச் செய்து கொடுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் எங்கள் பகுதி வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி.
ஒரு சில வாரங்களில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துவிடும். இந்நிலையில் தமிழக முதல்வர் இந்த வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்து, வீட்டு சாவியை அவரது கையால் எங்களுக்கு வழங்க வேண்டும். அதுதான் எங்களுக்குப் பெருமை" என சின்னப்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சின்னப்பிள்ளையின் 2-ஆவது மகன் கல்லுவடியான் கூறுகையில், "இதுவரை ரூ.4 லட்சம் வரை செலவாகியுள்ளது. அதில் ரூ.2 லட்சத்தை அதிகாரிகள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். மீதத் தொகையையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் பூச்சு மற்றும் மராமத்துப் பணிகளுக்கு கூடுதலாக ரூ.4 லட்சம் வரை தேவையாக உள்ளது. நானும் எனது அண்ணனும் வீட்டிலுள்ள நகைகளை அடகு வைத்து, நாங்களே கொத்தனார், சித்தாள், மேஸ்திரி வேலைகளை ஒரு சில தொழிலாளர்களின் உதவியோடு செய்து முடித்துள்ளோம். இதற்காக தமிழக முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் எங்களது நன்றி. தமிழக முதல்வரே நேரில் வருகை தந்து வீட்டை அவரது கையால் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என சின்னப்பிள்ளையின் மகன் கல்லுவடியானும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஈடிவி பாரத் ஊடகத்திற்கு நன்றி" - பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை நெகிழ்ச்சி!