மதுரை: மதுரை புது மாகாளிப்பட்டியைச் சேர்ந்த மணிபாரதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் வெளியே கிழக்குப் பகுதியில் கி.பி.1628 ஆம் ஆண்டு முதல் 1635ஆம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னரால் புது மண்டபம் கருங்கற்களால் கட்டப்பட்டது.
அழகிய கலைநயத்துடன் கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் 25 அடி உயரத்திலும், 330 அடி நீளத்திலும், 15 அடி அகலத்தில் புது மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் 124 கலைநயமிக்க தூண்கள் உள்ளன. மேலும், மண்டபத்தில் சுவாமி சிலைகள் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் இந்த புது மண்டபம் பகுதியில் ஆவணி மூலத் திருவிழா நடத்தப்பட்டு வந்துள்ளது.
பின்னர், அந்த மண்டபத்தில் வணிக ரீதியாக 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து அங்கே தையல் தொழில், பாத்திரங்கள், பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் அந்த கடைகள் அங்கிருந்து அகற்றப்பட்டு தற்போது குன்னத்தூர் சத்திரத்தில் செயல்பட்டு வருகிறது.
கலைநயமிக்க புது மண்டபத்தை தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பழமை மாறாமல் மறு சீரமைப்பு பணி மேற்கொண்டு சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ண குமார், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “புது மண்டபத்தை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடும், நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. பிறகு ஏன் புது மண்டபத்தை புதுப்பிக்க காலதாமதம் ஆகிறது? மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உட்பட்ட புது மண்டபத்தை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் புதுப்பிக்கும் பணிகளை முடிக்க கோயில் நிர்வாகத்திற்கும், ஒப்பந்தகாரருக்கும் உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்