மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க வந்து செல்கின்றனர்.
இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோயிலுக்குச் சொந்தமான கட்டிடத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை விதியின் படி கோயிலுக்கு உரிய வாடகை செலுத்த வேண்டும்.
1989 முதல் 2011ஆம் ஆண்டு வரை வாடகை செலுத்தப்பட்டு உள்ளது. ஆனால் 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வாடகை செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அறநிலையத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 13 வருடங்களில் வாடகை பாக்கியாக 54 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கோயிலுக்குச் செலுத்த வேண்டியது உள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முறையீடு செய்யப்பட்டது.
ஆனால் இதுவரை கோயிலுக்குச் செலுத்த வேண்டிய வாடகையை முறையாகச் செலுத்தவில்லை. எனவே முறையாக வாடகை செலுத்தத் தவறிய திருநெல்வேலி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கோயிலுக்குச் சேர வேண்டிய வாடகை பாக்கியை உடனடியாக செலுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயிலுக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்த மூன்று மாத கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். மனுதாரர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் 13 ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ளனர்.
எனவே ஒரு வாரத்தில் வாடகை செலுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் கால அவகாசம் வழங்கக் கூடாது. கோயில் நிலங்களில் பிற ஆக்கிரமிப்பை அகற்றும் பொறுப்பில் உள்ளவர்களே இதுபோன்று ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதி, வாடகை பாக்கி இவ்வளவு காலம் செலுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் குறைந்தபட்சம் ஒரு மாதத்தில் வாடகை பாக்கி செலுத்தலாமே என்று கூறிய நீதிபதி, எப்பொழுது வாடகை பாக்கியைச் செலுத்துவீர்கள் என்கின்ற விவரத்தை வருகின்ற வெள்ளிக்கிழமை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் போட்டி!