மதுரை: சேலம் கிழக்கு மாவட்டம் மணல் மற்றும் எம் சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மணலை, தமிழ்நாடு அரசு சார்பாக கிடங்குகள் அமைத்து, அரசு இணையதளத்தில் பதிவு செய்த பின்னரே விற்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பதிவு செய்கின்றனர்.
ஆனால், தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அரசு அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு, அளவுக்கு அதிகமாக விலையை நிர்ணயித்து மணல் விற்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை விதிகளைப் பின்பற்றாமல், அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு, கிடங்குகளுக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்கின்றனர்.
மேலும், பொதுமக்களின் பெயரில் அரசு இணையதளத்தில் பதிவு செய்து, அரசு அதிகாரிகளே போலியான வாகன எண்ணைப் பயன்படுத்தி மணலை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
அரசு நிர்ணயித்த விலையை விடவும், அரசாணையில் உள்ள விதிகளைப் பின்பற்றாமலும் இதுபோன்று அரசு அதிகாரிகளே ஏமாற்றி வருகின்றனர். இது போன்ற செயலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு நேரடியாக ஆற்று மணலை விற்க அரசு நடவடிக்கை எடுத்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி விதிகளைப் பின்பற்றி குவாரி மற்றும் மணலை விற்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இருக்கும் விதிகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் மணல் கடத்தல் கும்பலுடன் பேரம் பேசிய வட்டாட்சியர்?