மதுரை: சென்னையைச் சேர்ந்த பிஸ்வ குமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் தனியார் மருத்துவ நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றிய போது, ஹரிஹரன் என்பவர் பணியில் சேர்ந்தார். இருவரும் பங்குதாரர்களாக இருக்கலாம் எனக் கூறி என்னை மூளைச்சலவை செய்து, அவர் எந்த முதலீடும் செய்யாத நிலையில், பங்குதாரராக இணைந்து நிறுவனத்தை தொடங்கினோம்.
எங்களது புதிய நிறுவனம் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியது. நிறுவன வளர்ச்சிக்காக என்னை நம்ப வைத்து, சுமார் 6 கோடி வரை முதலீடு செய்ய வைத்தார். என்னிடம் பெற்ற பணத்தை ஆன்லைன் விளையாட்டு போன்றவற்றிலும் முதலீடு செய்துள்ளனர்.
இது குறித்து சென்னை மற்றும் மதுரை இணைய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யபட்டு வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. மதுரை மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் போதிய தொழில்நுட்ப வசதி இல்லாததால், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சைபர் குற்றங்களை விசாரிக்கும் பிரிவுக்கு இந்த வழக்கு விசாரணையை மாற்ற உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை உள்ளிட்ட தென் மண்டலங்களில் சைபர் குற்றங்களை விசாரணை செய்ய எவ்வளவு காவலர்கள் உள்ளார்கள், வல்லுநர்கள் போதிய அளவில் உள்ளார்களா, போதிய தொழில்நுட்பங்களும் உள்ளதா என்பது குறித்து தென் மண்டல காவல்துறை தலைவர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: பேஸ்புக் பிரண்ட் ரிக்வஸ்ட்டில் 38 லட்சம் ருபாய் இழந்த பெண்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!