மதுரை: வெளிநாடு மருத்துவ பட்டதாரி தேர்வுகளுக்கான FMGE தேர்வு நடத்த தடை விதிக்க உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த கேசவன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "எனது மகன் பிலிப்பைன்ஸ் நாட்டில் தனது மருத்துவப் படிப்பை பயின்றார். வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் இந்தியாவில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதோ, மேல் படிப்புகளை பயிலவோ, FMGE எனப்படும் வெளிநாடு மருத்துவ பட்டதாரி தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். எனது மகன் தொடர்ச்சியாக தேர்வுகளுக்கு தயாராகி எழுதி வருகிறார்.
இந்நிலையில், இந்த ஆண்டு வெளியான FMGE தேர்வுக்கான அறிவிப்பில், தேர்வு முடிவு வெளியான பின்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மறுமதிப்பீடு, மறுகூட்டல் தொடர்பான அறிவிப்பை நீக்கி புதிய உத்தரவு வெளியிட வேண்டும்.
இது மாணவர்களுக்கான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. ஆகவே, வெளிநாடு மருத்துவ பட்டதாரி தேர்வுகளுக்கான அறிவிப்பில் மறு மதிப்பீடு, மறுகூட்டல் தொடர்பான அறிவிப்பை நீக்கி புதிய உத்தரவு வெளியிடவும், அதுவரை தேர்வை நடத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய அரசின் இந்திய மருத்துவக் கழகம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சேலத்திலிருந்து திருச்சி NIT செல்லும் முதல் பழங்குடியின மாணவி சுகன்யா! - Salem TRIBAL STUDENT Passed JEE