மதுரை: மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அமைந்துள்ள கீழக்கரை கிராமத்தில், கடந்த ஜனவரி 24-ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில், தமிழ்நாடு அரசு சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய காளைகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில், அந்தப் போட்டியில் பங்கேற்ற எனது காளை வாடி வாசலில் இருந்து வெளியே வந்து சிறப்பாக விளையாடியது. அதனை பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசித்தனர். மேலும், எனது காளை முதல் பரிசு வாங்கும் என்று அனைவரும் நம்பிக்கையூட்டிய நிலையில், வேறு சிலருக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் வழங்கப்படுவதாக விழா கமிட்டியினர் மற்றும் அரசு அதிகாரிகள் அறிவித்தனர்.
எனது காளை சிறப்பாக விளையாடி மக்களிடையே பெரும் ஆதரவை பெற்ற நிலையில், இதுபோன்று அரசியல் காரணமாக பரிசுகளை தட்டிப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, ஜல்லிக்கட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்த பின்பு, முதல், இரண்டு மற்றும் மூன்றாவது பரிசுகளை அறிவிக்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் தரப்பின் கோரிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை அருகே ரூ.111.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!