மதுரை: மதுரையைச் சேர்ந்த ஜோசப் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான் கடந்த 25 வருடங்களாக அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பணிமனையில் இருந்து, திருப்புவனம் போக்குவரத்து கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டேன்.
எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் என்னை பணியிட மாற்றம் செய்துள்ளனர். மூத்த ஊழியரான தன்னை, காரணமின்றி இடமாற்றம் செய்துள்ளனர். மேலும், தன்னை மாற்றம் செய்துள்ள திருப்புவனம் கிளையில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, எனது பணியிட மாற்றத்தை ரத்து செய்து, மீண்டும் மதுரை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தனிநீதிபதி, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டதில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்விஜய்குமார், கங்க பூர்வாலா மற்றும் நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “அரசு ஊழியரை இடமாற்றம் செய்யும் உத்தரவை தண்டனைக்குரியதாக பார்க்கக்கூடாது. அது சேவையின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும். அதேபோல, அனைத்து ஊழியர்களுக்கும் அடிப்படை வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். மனுதாரர், அடிப்படை வசதிகள் இல்லாவிட்டால், துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம்” என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: திமுக இருக்காது எனக் கூறிய பலர் காணாமல் போயுள்ளனர்.. பிரதமருக்கு கனிமொழி பதிலடி!