மதுரை: கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சி பெற்று சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணையில், பல்வேறு மாணவர்கள் இதுபோன்று ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது தெரிய வந்தது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 27வது குற்றம் சாட்டப்பட்டவராக உள்ள தருண்மோகன், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கைரேகை பதிவு, தேர்வு மையம், தொலைபேசி எண்கள் ஆகியவை சிபிசிஐடிக்கு வழங்கப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி, "ஒரு அமைப்பு கேட்கும் அனைத்து விவரங்களையும் வழங்கினால்தானே முழுமையாக விசாரிக்க இயலும். சிசிடிவி கேமரா பதிவுகள் இல்லை, விண்ணப்பங்கள் இதுவரை வழங்கப்படவில்லை, இந்த ஆண்டும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என குறிப்பிட்டார். தொடர்ந்து இதுவரை இந்த வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா? என்று கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, சிபிசிஐடி தரப்பில், "கைரேகை பதிவு, தேர்வு மையம், தொலைபேசி எண்கள் தொடர்பான விவரங்கள் கடந்த 22ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆனால், இன்னமும் விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் விசாரணை நடந்து வருகிறது.
இதில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்டவர் குறித்து விவரங்கள் கிடைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிங்கள் கொடுக்கப்படும் பட்சத்தில் அது உறுதி செய்யப்படும். ஆகவே, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி, “வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும்” என குறிப்பிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஸ்விக்கி, சொமாட்டோ மூலம் மது விற்பனை? அமைச்சர் முத்துசாமி பதில்!