மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், கீழ்குளம் இரண்டாம் நிலை பேரூராட்சி தலைவர் சரளா, வார்டு கவுன்சிலர்கள் விஜயகுமார், கிருஷ்ணன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில், “கீழ்குளம் இரண்டாம் நிலை பேரூராட்சி பகுதி 1,050 ஹெக்டேர் பரப்பளவில் தேங்காபட்டினம் - கருங்கல் சாலையில் கடலோர மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது.
இந்த நிலையில், கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக வீடு கட்டுவதற்கு அங்கீகாரம் வழங்குவது, அந்த வீடுகளுக்கு வரி வசூலிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இணையம்புத்தன்துறை ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை சீற்றம் ஏற்படும் அபாயகரமான கடலோரப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு சட்டவிரோதமாக அவர்கள் அனுமதிக்கின்றனர்.
இதனால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். கீழ்குளம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் இணையம்புத்தன்துறை ஊராட்சி வீடு கட்டுவதற்கு அங்கீகாரம் வழங்க எந்த உரிமையும் இல்லை. கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் தொடர்பாக அரசு ஆவணங்கள் தெளிவாக உள்ளன.
ஆனால், அவர்கள் விதிகளை மீறி, எங்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்ட அனுமதிக்கின்றனர். எனவே, கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இணையம்புத்தன்துறை ஊராட்சி சார்பில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்குவது மற்றும் வரி வசூலிக்கக் கூடாது. ஏற்கனவே அனுமதி வழங்கியது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேரூராட்சித் தலைவர் உள்ளிட்டோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்கு இணையம்புத்தன்துறை ஊராட்சி அனுமதி வழங்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும்” நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்; நிபுணர் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை!