- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி, சாகசங்களில் ஈடுபட்டு, மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முகமது ஆசிக், முகமது சாதிக் ஆகிய இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் முக்கிய சாலைகளில் பைக் சாகசங்களைத் தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளையும், பள்ளி - கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பைக் ரேஸ், பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து, பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில், அவர்களை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, எதிர்காலத்தில் இது போன்ற வழக்குகளைக் கையாள்வதற்குத் தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!