சென்னை: மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 11 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் செவிலியர்களுக்கு 270 நாட்களுக்கான ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு மறுத்ததை எதிர்த்து, எம்ஆர்பி செவிலியர் அதிகாரமளித்தல் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதால் செவிலியர்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்க முடியாது என அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய நாவரசு படுகொலை.. ராகிங் தடுப்பு சட்டம் உருவான பின்னணி..!
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டத்தில் கூறப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யும்பட்சத்தில், ஒப்பந்த பணியாளர்களுக்கும் மகப்பேறு சலுகைகளை மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ஒப்பந்தப் பணி நியமன நிபந்தனைகளைக் கூறி, மகப்பேறு சலுகைகளை மறுப்பதை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் மகப்பேறு சலுகை கோரி அளித்து நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை மூன்று மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.