சிதம்பம்: சிதம்பம் நடராஜர் கோவிலில் நாளை (ஜூலை 10) முதல் 3 நாட்களுக்கு 'ஆனி திருமஞ்சன விழா' நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கனகசபையில் இருந்து பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என சம்பந்த மூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், “தீட்சிதர்கள் பிரச்னையில் கனகசபையில் இருந்து பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த 2023ஆம் ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் இந்த வருடம் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2008ஆம் ஆண்டு முதல் இந்த பிரச்னை இருந்து வருகிறது. கரோனா காலத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தினமும் காலை 30 நிமிடங்கள் தேவாரம் மற்றும் திருவாசகம் பாட மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
மற்ற பாராயணங்ககளையும் கீழிருந்தே செய்து வருகின்றனர். தமிழில் பாடவும் அனுமதி வழங்கப்பட்டது. வருவாய்த்துறை ஆணையர் முன்னிலையில் 2008ல் நடந்த கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. தீட்சிதர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்தனர். தீட்சிதர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதன்படி பக்தர்கள் கனகசபைக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், விழாக் காலங்களில் 2,000 பேர் தரிசனம் செய்ய விரும்பினால் என்ன செய்வது? அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்? 5 நிமிடத்தில் 108 பேர் மட்டுமே கனகசபையில் இருந்து தரிசிக்க அனுமதிக்க முடியும்.
சிதம்பரம் கோவிலை நீதிமன்றம் நிர்வகிக்க முடியாது. வழிகாட்டுதல்களை மட்டுமே வழங்க முடியும். ஏற்கனவே, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அறநிலையத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் தனது கோரிக்கை குறித்து அறநிலையத்துறைக்கு மனு அளிக்கலாம் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: யார் இந்த சத்யா? 50 திருமணங்கள்.. மாடு மேய்ப்பவர் முதல் போலீஸ் அதிகாரி வரை.. திருப்பூரில் பகீர் சம்பவம்!