சென்னை: மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தை, மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகளுக்கு பயன்படுத்துவதை எதிர்த்து, கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் ராஜ் முகமது, ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி நிர்வாகிகள் பொது நல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், மதுரை மருத்துவக் கல்லூரியில் மார்ச் 26ஆம் தேதி முதல் மே மாத இறுதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டது.
தரைத்தளத்தில் உள்ள நூலகத்தை வாக்கு எண்ணிக்கை மையமாகவும், இரண்டாவது தளத்தில் ஆய்வகத்தை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் ஸ்ட்ராங் அறையாகவும் தேர்தல் ஆணையம் பயன்படுத்த இருப்பதால், அங்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக, மாணவர்களின் சுதந்திரமான நடமாட்டம் பாதிக்கப்படும் என்றும், நூலகத்தை முறையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், கட்டடத்தின் ஒரு பகுதியில் உள்ள 12 அறைகள் மட்டுமே பயன்படுத்த உள்ளதால், ஆய்வகத்திற்கு செல்ல இடையூறு இருக்காது எனவும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் காவல்துறையின் பரிந்துரைப்படி, கல்லூரியில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு கருதியே, இந்த மருத்துவக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
குறிப்பாக, கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வதை தவிர்க்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தாலும், அவற்றை தேர்வு செய்ய வேண்டிய நிலைதான் ஏற்படுகிறது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான தற்காலிக ஏற்பாடுகளுக்காக 2 கோடி ரூபாய் அளவிற்கு செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ஏன் மாற்று இடம் கூடாது என்றும், ஒவ்வொரு தேர்தலுக்கும் 2 கோடி ரூபாய் செலவாகிறது என்றால், தனியாக கட்டடத்தை கட்டிக்கொள்ளலாமே என கேள்வி எழுப்பியதுடன், அடுத்தமுறை மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்வதை தவிர்க்கலாம் என ஆலோசனை வழங்கினர்.
ஒரு மாதம் கல்லூரி வளாகத்தில் குறிப்பிட்ட பகுதியை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால், ஏன் வேறு இடத்தை ஒதுக்கக் கூடாது என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: யார் இந்த ஆர்.சச்சிதானந்தம்? திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இவர் செய்தது என்ன?