சென்னை: பெண் காவல்துறையினரை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மே 12ஆம் தேதி குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. அதில், நீதிபதி சுவாமிநாதன், குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முகாந்திரம் இருப்பதால் அதை ரத்து செய்வதாகவும், நீதிபதி பாலாஜி தனது உத்தரவில், அரசுத் தரப்பு பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், வழக்கின் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஜி.ஜெயச்சந்திரன் முன்பு வழக்கு கடந்த 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மட்டுமே மூன்றாவது நீதிபதி ஆய்வு செய்ய வேண்டும். புதிதாக விசாரணை செய்ய தேவையில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “என்ன காரணத்திற்காக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது என நீதிமன்றம் அறிய விரும்புகிறது. அதனால் அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும். மூன்றாவது நீதிபதி அமர்வு நீதிமன்ற தீர்ப்புகளை மட்டும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது சரியா? என நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். அதற்கு அரசு பதிலளிக்க போதிய அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், அரசு தொடர்ந்து காலதாமதம் செய்வது ஏன் என மர்மமாக உள்ளது. அரசுத் தரப்பில் பிற்பகல் 2.15க்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: "ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது" - தஞ்சை போலீசார் செய்த தரமான சம்பவம்!