சென்னை: பெண் காவல்துறையினரை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மே 12ஆம் தேதி குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. அதில், நீதிபதி சுவாமிநாதன், குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முகாந்திரம் இருப்பதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பாலாஜி பிறப்பித்த உத்தரவில், அரசுத் தரப்பு பதில் அளிக்க வேண்டும் என மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், வழக்கின் மூன்றாவது நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மூன்றாவது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, “அமர்வு நீதிமன்ற நீதிபதி பாலாஜி தீர்ப்பளித்து 15 நாட்கள் கடந்த நிலையில்
ஏன் அரசு சார்பில் இன்னும் பதிலளிக்கவில்லை? தற்போது மீண்டும் அவகாசம் ஏன் கேட்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார். ஒரு வழக்கில் குற்ற முகாந்திரம் உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும். தனிமனிதர் மீதான வழக்காக இருந்தாலும் கவனம் செலுத்துவதில் தவறில்லை” என தெரிவித்து வழக்கை ஜூன் 6 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.