சென்னை: கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மாவீரன் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ்-க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு, முதல் வகுப்பு சிறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், யுவராஜின் சமூக அந்தஸ்து மற்றும் அவரது கல்வித் தகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சேலம் மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து முதல் வகுப்பு வழங்கலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், சேலம் மாவட்ட ஆட்சியர் யுவராஜின் தனிப்பட்ட செயல்பாடுகள் மற்றும் பின்புலங்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மனுதாரர் தரப்பில், வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே, இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், முதல் வகுப்பு சிறை கோரிய வழக்கை திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க: கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; “யுவராஜ்-க்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க உரிமை கோர முடியாது” - தமிழக அரசு தகவல்!