சென்னை: கடந்த 2008ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டுமனைகளைத் தனது உறவினர்களுக்கும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கும் ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் கூறப்பட்டது.
புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி மீது கடந்த 2012ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள முறைகேடு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஐ.பெரியசாமி சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான ஊழல் முறைகேடு புகார் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்துக் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
இதனை அடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், "வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் பெரியசாமியின் முதல் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குற்றச்சாட்டுப் பதிவுக்குப் பின் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி இரண்டாவது முறையாகத் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஆனால், அந்த மனுவை ஏற்றுக் கொண்டு அமைச்சரை விடுவித்துச் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.
வழக்கில் சாட்சி விசாரணையை முடக்கும் நோக்கில் இரண்டாவது முறையாக விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ததன் மூலம் நீதிமன்ற நடைமுறையை அமைச்சர் ஐ.பெரியசாமி தவறாகப் பயன்படுத்தியுள்ளார். மேலும், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது ஐ.பெரியசாமி அமைச்சராக இல்லை. எம்.எல்.ஏ-வாக மட்டுமே இருந்துள்ளார்.
அதனால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அவருக்கு எதிராக வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி பெறத் தேவையில்லை. சபாநாயகரிடம் தான் அனுமதி பெற வேண்டும். ஆகவே, பெரியசாமிக்கு எதிராக வழக்குத் தொடர சபாநாயகர் ஒப்புதல் அளித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை.
எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளில் இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றினால், அது நீதி பரிபாலனத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அசைத்துப் பார்த்து விடும். அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணை என்பது கேலிக்கூத்தானது என மக்கள் நம்ப இடமளித்து விடக் கூடாது.
ஆகவே, அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்து, ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை மார்ச் 26-ஆம் தேதிக்குள் மீண்டும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான ஊழல் முறைகேடு புகார் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மார்ச் 28-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கான சொந்தப் பிணையும், அதே தொகைக்கான இரு நபர் பிணையும் செலுத்த வேண்டும். வழக்கு மாற்றப்பட்ட பின், உடனடியாகச் சிறப்பு நீதிமன்றம் விசாரணையைத் துவங்க வேண்டும்.
விசாரணையைத் தாமதப்படுத்தக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முயன்றால், அவர்களை ஆஜராகக் கூறி, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடலாம். வழக்கைத் தினந்தோறும் விசாரித்து ஜூலை 31ம் தேதிக்குள் முடித்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் அப்டிங்க: 10 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்த மாதாந்திர குடும்பச் செலவு.. ஆய்வு முடிவு கூறுவது என்ன?