சென்னை: தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இந்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் துறை பிறப்பித்த உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சென்னைக்குள் மட்டும் பொருந்துமா அல்லது மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்துமா என்று விளக்கப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வாகனங்களின் முன்பக்கம், பின்பக்க கண்ணாடிகளில் மதச் சின்னங்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஸ்டிக்கர்களாக ஒட்ட தடை விதிக்க வேண்டும், பேருந்துகளின் பின்புறம் மற்றும் இருபுறங்களில் வணிக விளம்பரங்கள் செய்வதைத் தடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் எனவும், கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் A.D.ஜெகதீஷ் சந்திரா மற்றும் ஆர்.கலைமதி அமர்வு, அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: "சவுக்கு சங்கருக்கு சிறைக்கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம்" - தமிழ்நாடு அரசு வாதம்! - Savukku Shankar Case