சென்னை: கடலூர் மாவட்டம் சிலம்பிமங்கலத்தை அடுத்த சின்னாண்டிகுழி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடபதி, கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அதில், "கடலூர் மாவட்டம் சின்னாண்டிகுழி என்ற குக்கிராமத்தில் உள்ள எனது வீட்டிற்கு மின்சார இணைப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக எனது குடும்பம் மின்சார வசதி இல்லாமல் வசித்து வருகிறோம். எனவே, இது தொடர்பாக தமிழ்நாடு மின்சாரத் துறையின் பரங்கிப்பேட்டை உதவி பொறியாளர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கடந்த மார்ச் மாதம் மனு அளித்தேன்.
ஆனால், அந்த மனு குறித்து இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட்டவில்லை. இதன் காரணமாக, குடிநீர் மற்றும் மின் இணைப்பு கிடைக்காமல் என்னுடைய கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, இரவு நேரங்களில் என்னுடைய வயதான பெற்றோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஆகவே, இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுத்து முறையான குடிநீர் வசதி மற்றும் வீட்டிற்கான மின் இணைப்பை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார் மனுதாரர் வெங்கடபதி. இந்த நிலையில், இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மின் இணைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும், ஆனால் மனுதாரரின் வீட்டின் அருகில் மின்கம்பம் நட்ட போது, அந்த இடம் வேறு ஒரு நபருக்குச் சொந்தமானது என பிரச்னை எழுந்தது. இது தொடர்பான வழக்கு காவல் நிலையத்தில் விசாரணையில் இருப்பதாகவும்" தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு வாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி, மனுதாரரின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டார். மேலும், இதை செயல்படுத்தியது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: மின் கட்டணம் உயர்வு; இவர்களுக்கெல்லாம் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை