மதுரை: தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிக்கு வரும் பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் உரிய வசதிகள் செய்து தரக்கோரி வழக்கறிஞர் கிருஷ்ணசாமி என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞர் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. குறிப்பாக, எண்ணெய் மசாஜ்களுக்கு தடை செய்தும், சோப்பு, ஷாம்பு உள்ளிட்டவற்றை நிரந்தரமாகத் தடை செய்தும், குற்றாலம் பகுதியிலிருந்த டாஸ்மாக் கடைகளை ஊருக்கு வெளியே மாற்றுவது உள்ளிட்ட 43 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
அந்த வகையில் இன்று(ஏப்.15) நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் ஆகியோர் அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், குற்றாலம் அருவிக்கு வரும் பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் உரிய வசதிகள் செய்து தருவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: "பாஜகவின் தேர்தல் அறிக்கை சங்கட பத்ராவாகத்தான் இருக்கின்றது" - ஜவாஹிருல்லா விமர்சனம்! - Jawahirullah Criticized Bjp