சென்னை: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த், திருமணத்துக்காக ஆன்லைன் செயலி மூலமாக பெண் தேடி வந்தார். அப்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து, இருவரும் பழகி வந்த நிலையில், இருவருக்கும் காதல் ஏற்பட்டு வீட்டில் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் அரவிந்த் சத்யாவுடன் தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். அப்போது குடும்ப அட்டையில் சத்யாவின் பெயரை இணைக்க முயன்றபோது சத்யா ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிய வந்ததையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மகேஷ் தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்து விசாரித்த போது, சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவரில் இருந்து காவல் துறையினர், தொழிலதிபர்கள் உட்பட 53 பேரை திருமணம் செய்து பணம், நகைகளை திருடி ஏமாற்றியது தெரியவந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நடந்த இந்த திருமண மோசடிகளில் உடந்தையாக இருந்த தமிழ்செல்வி என்பர் குறித்து காவல்துறை விசாரித்து வரும் நிலையில் அவரும் தலைமறைவானார். இந்த நிலையில், இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி தமிழ்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட 43 வது கணவர் மகேஷ் அரவிந்த் தரப்பில், வழக்கறிஞர் ஹரிஸ்குமார் ஆஜராகி, திருமண செய்வதாக மோசடி செய்து 53 ஆண்களை சத்யாவும் அவரது தோழி தமிழ்செல்வியும் ஏமாற்றி இருப்பதால் முன்ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், சத்யாவை திருமணம் செய்ததால் ஏமாற்றப்பட்டதை அறிந்த தன் தாத்தா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, போட்டோவை பார்த்தவுடன் ஒகே சொல்லிட்டீங்களா? திருமணம் செய்யும் முன் விசாரிக்கவில்லையா? என பாதிக்கப்பட்டவருக்கு கேள்வி எழுப்பினார்.
காவல்துறை தரப்பில், வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும், சத்யா 3 முறைக்கு மேல் திருமணம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்ததாகவும், அவரின் தோழி தமிழ்செல்வியை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, திருமண மோசடி வழக்கில் தொடர்புடைய தமிழ்செல்வியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளில் மதுபானம் விற்க அனுமதி கோரிய வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!