சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கத்துடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலை பரப்பும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து சேலம் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து, வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதாகவும், ஒராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பப்பட்ட போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று (பிப்.8) விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்து அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளார். மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை கீழமை நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் கூறினார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த உத்தரவில், “யுடியூப் சேனலுக்கு 44:25 நிமிடங்கள் அண்ணாமலை பேட்டி அளித்திருந்த நிலையில், அதில் தீபாவளி தொடர்பான குறிப்பிட்ட பகுதியை கொண்ட 6:50 நிமிடங்களை எடுத்து அவரது கட்சியின் எக்ஸ் வலைதளத்தில் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாக பகிர்ந்துள்ளனர்.
இந்த பேட்டியில் இந்து கலாச்சாரத்திற்கு எதிராக கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் செயல்படுவது போல முன்னிறுத்தியதன் மூலம், சமுதாயத்தை பிளவுபடுத்த வேண்டுமென்ற உள்நோக்கம் அவருக்கு இருந்துள்ளது என்பதற்கு முகாந்திரம் உள்ளது. இந்திய காவல் பணியின் முன்னாள் அதிகாரியான அண்ணாமலை சட்டத்தை பற்றி தெரிந்திருப்பார்.
கட்சியின் மாநில தலைவராக மக்களிடம் செல்வாக்கு பெற்ற இவரது கருத்துக்கள் இந்து மதத்தினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். சுற்றுச்சூழல் நலனுக்காக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திடீரென மத ரீதியிலான பதட்டத்தை எடுத்து செல்லும் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. அண்ணாமலையின் பேச்சு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்பதற்கும் முகாந்திரம் உள்ளது.
பேட்டியளித்து 400 நாட்கள் கடந்த பிறகு சமுதாயத்தில் வன்முறை, பொது அமைதிக்கு குந்தகம் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற அண்ணாமலை தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு நிரந்தரமாக உள்ளதால், இதுபோன்ற பேச்சுகள் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வெடிகுண்டை (ticking bomb) போன்றது.
பியூஷ் மனுஷ் அளித்த புகாரை தெளிவாக ஆராய்ந்த பிறகே, சேலம் மாஜிஸ்திரேட் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். எனவே வழக்கை ரத்து செய்ய முடியாது. ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி” என்றார்.
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் விவகாரம்; வரைபடம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!