சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி பி.தனபால் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “சுமார் 43 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரப்பட்டது. இதனையடுத்து, காவல்துறை தரப்பில் அரசு தலைமை கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, “பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக சிறுமிகள் புகார் அளித்தபோது, அதனை முறையாக விசாரிக்காமல் ஆசிரியர்கள் அலட்சியமாக நடந்து கொண்டனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்களின் ஜாமீன் மனுக்கள் மீது அக்டோபர் 14ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” என அறிவித்தார்.
இதையும் படிங்க: போலி என்.சி.சி முகாம் வழக்கு: தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ஐகோர்ட்!