சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே, இதை எதிர்த்து என்எல்சி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டவிரோத போரட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில் குமார் முன்பு இன்று மீ்ண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்எல்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, “மனுதரார் கடந்த ஆண்டும் இதே 16 கோரிக்கை வைத்து போராட்ட அறிவிப்பு வெளியிட்டனர். அதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு மற்றும் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
அதன்படி, இந்த பிரச்னை தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இப்போதும் அதே கோரிக்கை தொடர்பாக வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு மற்றும் நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது.
பிரச்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், போரட்டம் நடத்துவது சட்டவிரோதம் ஆகும். கோரிக்கை தொடர்பாக முடிவு எட்டுவதற்கு முன்னர் போரட்ட அறிவிப்பு தன்னிசையானது. தற்போது சிலர் போராட்டத்தை தூண்டி வருகின்றனர். இதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டாகும். எனவே, உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். மேலும், விதிகளுக்கு புறம்பாக அறிவிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.
இதனையடுத்து, தொழிற்சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன், “இந்த வழக்கு மிக ஆரம்ப நிலையிலும் தொடரபட்டுள்ளது. உரிமைக்காக வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு என்பது தொழிலாளர்கள் அடிப்படை உரிமை. தொழிலாளர் கோரிக்கை தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமைதியான முறையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் மட்டுமே தொழிற்சங்கம் முன்னெடுக்கிறது. பணிக்கு செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது இல்லை. அனுமதிக்கப்பட்ட இடத்தில் நாங்கள் எங்கள் கோரிக்கைக்காக போராடுவது சட்டவிரோதம் அல்ல, எனவே தடை விதிக்கக் கூடாது” என வாதிட்டார்.
இவ்வாறு இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதி என்.செந்தில்குமார், தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும், தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது.
என்எல்சி நிறுவனம் வேலை நிறுத்த நோட்டீஸ் தொடர்பாக தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும், நிறுவனத்திற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு (மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பை தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளாக திறக்கப்படாத ரயில்வே கழிப்பறை; பாரமரிப்பது என்எல்சியா.. ரயில்வே நிர்வாகமா என போட்டி?