சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி, தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் சாலைப் பேரணி நடத்தப்பட்டது. இதில், பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்ததாக, கோயம்புத்தூர் தனியார் பள்ளி மீதும், தலைமை ஆசிரியர் மீதும் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில், பள்ளியின் தாளாளர்கள் வேணுகோபால், நிர்மல்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுக்களில், பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் 22 மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி வாங்கிய பின்னரே, அவர்களை பேரணிக்கு அழைத்துச் சென்றதாகவும், மாணவர்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை எனவும், மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் பழிவாங்கும் நோக்கில், பள்ளி நிர்வாகத்தை துன்புறுத்தும் நோக்கத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: போலீசிடம் நயினார் நாகேந்திரனின் உறவினர் அளித்த முக்கிய வாக்குமூலம்! - Rs 4 Crore Cash Seized Issue