சென்னை: பொதுமக்களிடம் இருந்து 930 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக பாசி நிறுவனத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய நிதி நிறுவன இயக்குனர் கமலவள்ளி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.
சில நாட்களில் திரும்பி வந்த கமலவள்ளி, வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக ஆனைமலை காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் மோகன்ராஜ், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு அப்போதைய ஆய்வாளர் சண்முகையா ஆகியோருக்கு எதிராக புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், அப்போது மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மற்றும் போலீசாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தது.
இதை எதிர்த்து பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேக் குமார் சிங், மனுதாரர் லஞ்சம் பெற்றார் என்பதை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாகவும், அவர் சார்பாக மற்றவர்கள் வாங்கினார்கள் என குற்றம் சாட்டியது வெறும் யூகத்தின் அடிப்படையிலானது எனக் கூறி, கோவை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதி ரத்து செய்தும், இந்த வழக்கிலிருந்து பிரமோத் குமாரை விடுவித்தும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Tn Rain