சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “வயிற்று வலியால் அவதிப்பட்ட தனது 12 வயது மகன் கிஷோரை, மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், குடல்வால் அழற்சி ஏற்பட்டு இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
அதன்படி, அறுவை சிகிச்சைக்காக பணத்தைச் செலுத்திய பின்னர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் அபினவ் என்பவர் அறுவை சிகிச்சைக்கு முன்னர் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர், தன் மகன் கிஷோரைச் சந்திக்க மருத்துவர்கள் அனுமதி மறுத்தனர். மேலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தனது மகன் கிஷோர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தனியார் மருத்துவமனை மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறை தீர்வு முகாமில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தன்னுடைய மகன் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கதிரவன் ஆஜராகி, “அரசியல் செல்வாக்குடன் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனையில் பணியாற்றுவதால் மருத்துவ நிர்வாகத்தினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அறுவை சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட மயக்க மருந்து அதிகமாகியதன் காரணமாகவே கிஷோர் உயிரிழந்ததாக” தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதி, “அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மயக்கவியல் மருத்துவர் அபினவ், ஏன் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கச் சென்றார்? அவர் மீது பணி நீக்க நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?” என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து, இந்த வழக்கில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: பருத்திக்கு ரூ.10,000 கொள்முதல் விலை; கும்பகோணம் விவசாயிகள் கோரிக்கை!