சென்னை: தனியார் தொலைகாட்சி நிறுவனத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக சசிகலா மற்றும் நிறுவனத்தின் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
பெங்களூரு சிறையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் சாட்சியம் அளித்த சசிகலா, இந்த குற்றசாட்டு பதிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் ஆகியோர் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், குற்றச்சாட்டு பதிவின் போது சசிகலாவை முதல் குற்றவாளியாக மாற்றி நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சசிகலா மீதான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "அண்ணாமலையாருக்கு அரோகரா" - திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் முழு விவரம்..!
இதற்கு மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், 1994ம் ஆண்டு சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. நிறுவனத்தின் இயக்குநர் என்ற அடிப்படையில், சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், நிறுவனத்தின் மீதான குற்றத்திற்கு அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிறுவனம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். நிறுவனத்தின் இயக்குநர் என்ற அடிப்படையில் சசிகலா உட்பட 3 பேருக்கும் பொறுப்பு உள்ளது. அதனால், விசாரணையை தவிர்க்க கோர முடியாது.
விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிய பின் தேவையில்லாமல் வழக்கில் தலையிட்டு ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை. சாட்சிகள் விசாரணை தொடங்கியதும் தினமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். எழும்பூர் நீதிமன்றம் வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.