சென்னை: உலகின் 2வது பெரிய நீதிமன்றம் என்ற சிறப்பை பெற்ற சென்னை உயர்நீதிமன்றம், 160 ஆண்டுகளை கடந்த நிலையிலும் கம்பீரமாக செயல்பட்டு வருகிறது.
நீதிமன்றத்தின் தோற்றம்: ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 400 கட்டிடங்கள் அதன் பழமை பாரம்பரியம் மாறாமல் செயல்பட்டு வருகிறது. இருந்தும் சென்னை உயர்நீதிமன்றம் போல எந்த கட்டிடங்களும் புகழோடு செயல்பட்டது இல்லை. ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி 1639ம் ஆண்டு சென்னை மாகாணத்தை உருவாக்கியது. 1640ம் ஆண்டு ஜார்ஐ் கோட்டையை வணிக நோக்கத்திற்காக கட்டியது.
இந்தியாவில் உள்ள வழக்குகளை விசாரிக்க வணிக மையங்களில் நீதிமன்றங்கள் செயல்பட்டாலும், பெரும்பாலும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டன. 1847ல் ஏற்பட்ட "சிப்பாய் கலகத்திற்கு" பின் இங்கிலாந்து மகாராணியின் ஒப்புதலுக்கு பின் (ஜார்ஜ் டவுன்) என்ற இடத்தில் செயல்பட்டு வந்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி ஹாலி ஹார்மனின் கோரிக்கையை ஏற்று தற்போதைய இடத்தில் கட்டடம் கட்டப்பட்டது.
மெட்ராஸ் டூ சென்னை: 1862ம் ஆண்டுக்கு முன்பு வரை 'சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்' என்று அழைக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம், உரிய சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்ட பின் 1862- ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 'மெட்ராஸ் ஹை கோர்ட்' என்ற பெயர் மாற்றம் பெற்றது.
1996ம் ஆண்டு மதராசு என்பது சென்னை என்று சட்டப்பூர்வமாக பெயர் மாறினாலும், உயர் நீதிமன்றத்தின் பாரம்பரிய பெருமைக்காக மெட்ராஸ் உயர்நீதிமன்றம் (Madras High Court) என்றே அழைக்கப்பட்டது. 2016ம் ஆண்டு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர் நீதிமன்றம் என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
நீதிமன்ற கட்டுமானம்: உயர் நீதிமன்ற சிகப்பு நிற கற்கள் கட்டுமானம் இந்தோ-சார்சியனிக் முறையில் 1888ம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892ல் ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டது. உயர் நீதிமன்றத்தை 9.45 லட்சம் ரூபாயில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு, 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
முதல் உலகப்போரின் துவக்கத்தில் ஜெர்மனி தாக்குதலில் உயர் நீதிமன்றம் சேதமடைந்தது. இருப்பினும் மறுசீரமைப்புக்கு பின் அதே கம்பீரத்துடன் செயல்பட்டு வருகிறது. இவாறாக பல்வேறு சிறப்புகளை கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகவும், இந்தியாவில் முதல் பெரிய உயர் நீதிமன்றமாகவும் செயல்பட்டு வருகிறது.
பிரபல வழக்குகள்: இந்த நீதிமன்றத்தில், ஆங்கிலேய வங்கி, இந்திய மக்களை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கு முக்கியமானது. அதன் பிறகே இந்தியர்களுக்காக 'இந்தியன் வங்கி', 'இந்தியன் ஓவர்சீஸ்' வங்கி உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களால் தண்டனை விதிக்கப்பட்ட வ.உ.சி வழக்கு, புகழ்பெற்ற தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ் கிருஷ்ணன் மீதான லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என பல வழக்குகளை கூறலாம். நீதியின் வரலாறு, கட்டிடக்கலை, சட்ட சாஸ்திரங்களின் பாரம்பரியம் என்ற 3 பெருமைகளையும் உள்ளடக்கியது சென்னை உயர்நீதிமன்றம் என்றால் அது மிகையாகாது.
ஆச்சரியம் இல்லை: 160 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் உயர்நீதிமன்றம் தனது கம்பீரத்துடன் இருப்பது குறித்து வழக்கறிஞர் சொக்கலிங்கம் கூறியதாவது, "ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் 1948 முதல் 1961 வரை 13 ஆண்டுகள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.வி.ராஜமண்ணார் பதவியில் இருந்தார்.
இதுவரை எந்த நீதிமன்றத்திலும் இவ்வளவு காலம் ஒருவரே தலைமை நீதிபதி இருந்தது இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உயர்நீதிமன்றத்தில் இந்தியர் ஒருவர் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நீதிமன்றம் கம்பீரமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை எனத் தெரிவித்தார்.
இது குறித்து வழக்கறிஞர் முரளி கூறியதாவது, "வழக்கறிஞர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் சென்னை உயர் நீதிமன்றத்தின் பங்கு முக்கியமானது. 2016ல் சென்னை உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கியும் மாற்றாமல் இருப்பது வேதனையாக உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிசிலியன் நகரா சென்னை மெரினா? சென்னை தினத்தில் Marina Beach பற்றி அறியாத முக்கிய தகவல்கள்!