சென்னை: சென்னை மடிப்பாக்கம் கைவேளி பகுதியில் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு கார்கள் நிற்காமல் சென்ற நிலையில் அதனை விரட்டிப் பிடித்து பார்த்தபோது, அந்த காரில் மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, இரண்டு காரிலும் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், காரில் இருந்தது சோழவரம் விஜயநகர் ஏ கேட்டகிரியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ரஞ்சன் கிஷோர்குமார் (வயது 30) என்பதும், இவர் மடிப்பாக்கம் 188 திமுக வட்ட செயளாலர் செல்வம் கொலை வழக்கில் சிறை சென்று, கடந்த ஆண்டு இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், இவர் மீது பிடிஆணை உள்ளதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, மற்ற இருவவரும் செங்கல்பட்டு காவல் நிலைய சரித்திர பதிவேடு ஏ.பிளஸ் கேட்டகிரி குற்றவாளி ஒத்தகண் அசோக் (வயது 29), பீர்க்கன்காரணை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி உதயகுமார் (வயது 23) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் கடத்தி சென்ற 303 கிலோ கஞ்சா, மூன்று பட்டாகத்திகள், 2 கார்கள், 7 செல்போன்கள், 2 மோடம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர்கள் மூவர் மீதும் பெரிய அளவிலான வணிக நோக்கத்தில் போதைப் பொருள் கடத்தல் பிரிவு, ஆயுதம் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்து ஆலந்தூர் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பரங்கிமலை காவல் துணை ஆணையாளர் சுதாகர் கூறுகையில், "மடிப்பாக்கம் அருகே கைவேளி பகுதியில் அதிகாலை வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற இரண்டு கார்களை துரத்தி பிடித்த மடிப்பாக்கம் போலீசார், விசாரணை செய்ததில் நீதிமன்ற பிடியாணையில் உள்ள ரஞ்சன் கிஷோர்குமார் மற்றும் ஒத்தகண் அசோக், உதயகுமார் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 303 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சம்மந்தபட்ட நபர்கள் குறித்தும், அவர்கள் வேறு திட்டம் ஏதும் திட்டியுள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்படும். மேலும், இந்த பெரிய அளவிளான கஞ்சா பறிமுதல் மற்றும் முக்கிய குற்றவாளிகளைப் பிடித்த காவல் துறையினருக்கு வெகுமதிக்கு பரிந்துறை செய்யப்பட்டு உள்ளது" எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானின் மேல்முறையீடு மனுவிற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு!